ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் காலப்பகுதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 விசேட அறிக்கையொன்றை இன்று வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் இதனைத் தெரிவித்திருந்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

இலங்கை அரசியலமைப்பிலும் 1981ஆம் ஆண்டு 15ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு உரிய காலப்பகுதியினுள் வேட்புமனு கோரப்படும்.

தேர்தலை நடத்துவதற்கான திகதியைக் குறிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்குமிடையில் தேர்தல் நடத்தப்படும்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் அரசியல் வட்டாரங்களில் அண்மைக்காலமாக  பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்தன.

அது மாத்திரமின்றி தேர்தல் தொடர்பில் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட அறிவித்தல் வெளியிடப்படும் என்று ஆளுந்தரப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையிலேயே தேர்தலை நடத்துவதற்கான காலப்பகுதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
 எனவே பெரும்மளவானோரின் எதிர்பார்ப்பாகக் காணப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான முடிவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது