அரச ஊழியர்களின் முடிவுதான் நாட்டின் முதுகெலும்பு என்பதால் எதிர்காலம் குறித்து சிந்தித்து அவர்கள் தமது பெறுமதியான வாக்குகளை பயன்படுத்துவார்கள் என்று நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குறிப்பிட்டுள்ளார்.
அரச உத்தியோகத்தர்களை விழித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி,
ஒட்டுமொத்த மக்களும், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போது அரச ஊழியர்களாகிய நீங்கள் அனைவரும் உங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் சரியாகச் செய்ததன் மூலம் அரச சேவையை எவ்வித இடையூறும் இன்றி பராமரிக்க முடிந்தது என்பது இரகசியமல்ல.
இருப்பினும், நீங்கள் இன்னும் வரிச் சுமையால் சிரமப்படுகிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். நாம் பின்பற்றிய வெற்றிகரமான பொருளாதார சீர்திருத்தத் திட்டம், ஒரு நாடாக நாம் வீழ்ந்துள்ள நிலையிலிருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
சரியான பொருளாதார முகாமைத்துவ முறைகள் மற்றும் உங்களது அர்ப்பணிப்பின் பலனாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மையை எட்டியுள்ளது.
இவ்வாறான பின்னணியிலும் தற்போதுள்ள சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கும், அரச சேவையின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 24 வீதத்தால் அதிகரிப்பதற்கும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை ரூபா 25,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.
இந்த முன்மொழிவுகள் 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, நடைமுறைக்கு மாறான வாக்குறுதிகளை நிராகரித்து, நாட்டின் எதிர்கால வளர்ச்சியை இலக்காகக் கொண்ட கொள்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் நீங்கள் உன்னிப்பாக அவதானம் செலுத்துவது பொறுப்பான விடயமாகும்.
எனவே, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான சரியான கொள்கைகள் மற்றும் நடைமுறையில் அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிரமம் மற்றும் அனுபவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் உங்கள் பெறுமதியான வாக்குகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.