விடுதலைப் புலிகளின் தலைவரை வெளியே கொண்டு வர போராடிய தளபதிகள்! நேரடி சாட்சியம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆனந்தபுரத்திலிருந்து வெளியே கொண்டுவர பொட்டம்மான் உள்ளிட்ட தளபதிகள் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டதாக முன்னாள் போராளி அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன், நலமாக இருப்பதாக அண்மையில் பழ நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வழங்கிய விசேட செவ்வியிலேயே முன்னாள் போராளி அரவிந்தன் இந்த விடயத்தை கூறினார்.

மேலும் தெரிவிக்கையில், இறுதிப் போர் நடைபெற்ற போது 800 வரையான போராளிகள் நந்திக்கடலுக்குள்ளும், கரையிலே 400 வரையான போராளிகளும் இருந்திருந்தோம். மிக அருகிலே நிற்கும் சந்தர்ப்பம் எமக்கு அமைந்திருந்தது. அந்த களத்திற்குள் இருந்து மீண்டு வந்தவர்கள் மிக அரிதானவர்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கைத்துப்பாக்கி எடுக்கப்பட்டிருந்தது. அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் கைத்துப்பாக்கிகள் எழுக்கப்பட்டிருந்தன. அதைவிட மேலதிக ஆவணங்களையும் இராணுவம் கைப்பற்றியிருந்தது. ஆகவே அண்ணன் இல்லை என்பதை நாங்கள் உறுதியாக கூற முடியும்.

300 இற்கும் மேற்பட்ட போராளிகளின் உடல்களை நாம் அடையாளம் காட்டியிருந்தோம். அவர்களின் உடல்களில் பலத்த காயங்கள் காணப்பட்டதுடன், அவர்களின் உடல்கள் வெடித்துச் சிதறிய நிலையில் காணப்பட்டன.

இதேவேளை அதற்கு முன் நான்காம் மாதம் ஆனந்தபுரத்திலிருந்து வெளியேற விடுதலைப் புலிகளின் தலைவரான அண்ணன் விரும்பவில்லை.

அவர் அதற்குள்ளேயே விடுதலைப் போராட்டத்தை முடித்துக் கொள்ள விரும்பினார். அந்த சண்டைகளில் பானு தலைமை வகித்திருந்தார். இதன்போது பலரின் போராட்டத்திற்கு மத்தியில் தான் அண்ணனை ஆனந்தபுரத்திலிருந்து வெளியே கொண்டு வர முடிந்தது.

பொட்டம்மான் உட்பட பலர் அண்ணனை வெளியே கொண்டு வருவதற்கான வேலைத்திட்டத்தில் பங்கேற்றிருந்தார்கள். தப்பியோடுகின்ற மனநிலையிலோ, வேறொரு நாட்டிடம் சரணடையும் மன நிலையிலோ அவர் இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.