மீண்டும் பிராந்தியத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது சீனா- கூட்டமைப்பு குற்றச்சாட்டு

சீன கண்காணிப்பு கப்பல் யுவான்வாங்-5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்தது மீண்டும் பிராந்தியத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மற்ற நாடுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டிகளில் தலையிடுவதில்லை என்றாலும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இராணுவப் பிரசன்னம் இந்தியாவுக்கு நியாயமான பாதுகாப்புக் கவலையை அளிக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னத்திற்கு இடம் கொடுப்பதன் மூலம் இலங்கை அதை வலியுறுத்தக் கூடாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்வரும் 11ஆம் திகதி வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயற்கைக் கோள்கள், ரொக்கெட்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளைக் கொண்ட இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க இம்மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ள கப்பல் (யுவான் வாங் – 5) 17ஆம் திகதி வரை நங்கூரமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.