அரச, தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்கிறது மத்திய வங்கி


பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இயலுமை காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ள  இலங்கை மத்திய வங்கி, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அமைய ஊழியர் படையின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு முதலிரு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலையில் உள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டு வரை முதன்மை பணவீக்கம் குறைவானதாக பேணப்படும் என்றும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அரசியல் ரீதியான நிச்சயமற்ற தன்மை பொருளாதார மீட்சியின் மீதான பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் அதேவேளை,  திறமைசாலிகளின் உயர்ந்தளவான வெளியேற்றமானது தொழிலாளர் பற்றாக்குறைகளுக்கும், குறைந்த உற்பத்தித் திறனுக்கும் வழிவகுக்கும்.

இது பொருளாதார வளர்ச்சித் தோற்றப்பாட்டிற்கான இடர்நேர்வாக அமையும் என்றும் இலங்கை மத்திய வங்கி கூறுகின்றது.

2025 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் உயர்வடைந்துள்ள பணவீக்கத்தை 5 வீதம் நிலையாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்புள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.

வாழ்க்கை செலவு உயர்வுக்கும், ஊழியர்களின் சம்பள வீதத்துக்கும் இடையில்  நீண்ட இடைவெளி காணப்படுவதாகவும் சம்பள அதிகரிப்பு நாணய கொள்கை செயற்திட்டத்துக்கு பாதகமானதாக இருக்காது என்றும்  இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.

இதேவேளை, ஆட்சி  மாற்றத்துக்கேற்ப பொருளாதாரக் கொள்கைகளை இனி மாற்றியமைக்க முடியாது எனவும் இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

இதேநேரம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நிலுவை சம்பளம் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி அலுவலகம் கோரியிருந்த போதிலும் இதுவரை கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படவில்லை என ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அறிக்கை தயாரிப்பது தொடர்பில் கடந்த 31 ஆம் திகதி தொழிற்சங்கங்களை அழைத்து கலந்துரையாடல் ஒன்றை அமைச்சு நடத்தியிருந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி அலுவலகம் கல்வி அமைச்சிடம் அறிக்கையை கோரியுள்ளது.  

அத்தோடு, தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி சம்பள நிலுவை அறிக்கையை அனுப்புமாறு ஜனாதிபதியின் செயலாளர் அந்த கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார்.

எனினும், இதுவரையில் அறிக்கையை அனுப்புவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்,  சம்பளம் வழங்கப்படாதமையினால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பின் பின்னர் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.