கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டர் விவகாரம்!வெளியான தகவல்

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பில் நான்கு பேர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) சாட்சியமளித்துள்ளனர்.

மரணம் தொடர்பிலான முதற்கட்ட நீதவான் விசாரணை மூன்றாவது நாளாக இன்றும் அழைக்கப்பட்டிருந்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளை பொது மயானத்தின் மூன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பொரளை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இந்த சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.

இது தொடர்பான விசாரணை ஊடகங்களுக்கு திறக்கப்படாத நிலையில் மூடிய அறைக்குள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர், பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் சாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 175 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் குறைந்தபட்சம் 14 வழக்கு பொருட்கள் மற்றும் மாதிரிகள் பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.