கிழக்கு கடலில் மூழ்கி காணாமல் போன இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு

புதிய இணைப்பு

அம்பாறையில் கடலில் மூழ்கி காணாமல் போன பாடசாலை மாணவர்கள் இருவரும் இன்று (17) முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மாளிகைக்காடு - சாய்ந்தமருதைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 8 பேர் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்றுப் பிற்பகல் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது அதில் இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர்.அவர்களின் சடலங்களே இன்று மீட்கப்பட்டுள்ளன.

மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15), சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் இல்ஹம் (வயது 15) ஆகிய மாணவர்களே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாம் இணைப்பு

அம்பாறை, மாளிகைக்காடு - சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(16.02.2024) இடம்பெற்றுள்ளது.

மாளிகைக்காடு - சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 13 - 15 வயதுக்குட்பட்ட 8 மாணவர்கள் நேற்று(16) ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு சைக்கிள்களில் நிந்தவூர் - ஒலுவில் எல்லை கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.

கிழக்கு கடலில் மூழ்கி காணாமல் போன இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு | Two Students Of Sainthamaru Drowned In Nindaur Sea

இதன்போது கடலில் இறங்கி படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது மாலை 4.20 மணியளவில் அதில் இருவரைக் கடலலை உள்ளிழுத்துச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்படி கடலில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல்போன மாணவர்கள் இருவரையும் சம்பவத்தைக் கேள்வியுற்ற நிமிடம் முதல் கடற்றொழிலாளர்களும், பொதுமக்களும் இணைந்து தேடுதலை முன்னடுத்துவருவதாக கூறப்படுகிறது.

கிழக்கு கடலில் மூழ்கி காணாமல் போன இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு | Two Students Of Sainthamaru Drowned In Nindaur Sea

இந்நிலையில், ஏனைய 6 மாணவர்களையும் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.