யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள  காணாமல் போனோருக்கான அலுவலகத்திற்கு (ஓம்பி) முன்னால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சிலர் குறித்த அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ள சென்ற போதே இந்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் பதிவு ஒன்று மேற்கொள்ளவுள்ளதாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சிலருக்கு கடிதம் வந்ததாகத் தெரிவித்து அங்கு பதிவுகளை மேற்கொள்வதற்காக சிலர் சென்றுள்ளனர்.
இதனையறிந்த மற்றைய உறவுகள், அவர்களைத் தடுத்து நிறுத்தியதோடு, அலுவலகத்திற்குள்ளும் நுழைந்துள்ளனர். அதனையடுத்தே குறித்த அலுவலகத்திற்கு முன்னால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒரு சிலர் அதிகாரிகளிடம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் தொடர்பான பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு பயணக்கொடுப்பனவாக ஆயிரம் ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            