கொழும்பில் பதற்ற நிலை..! ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்


கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொண்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக புறக்கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக ஒன்றுகூடிய அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை காவல்துறையினர் வாசித்துக் காட்டியுள்ளனர்.

இதன்போது வீதியை மறிக்காது போராட்டத்தில் ஈடுபடுமாறு காவல்துறையினரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் ஏராளமான காவல்துறையினர், இராணுவத்தினர், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் ஆயுதம் தாங்கிய படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து கொழும்பு புறக்கோட்டை பகுதியில் ஒன்றுகூடிய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அனைவரும் பேருந்துகளில் லிப்டன் சுற்றுவட்டத்தை நோக்கி சென்றுள்ளனர்.

 கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து அரசாங்கத்திற்கு எதிரான தமது ஆர்ப்பாட்டப் பேரணியை அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொழும்பு பல்கலைகழகம் அமைந்துள்ள சேனாநாயக்க வீதியூடாக பேரணியாகச் சென்ற போது, தும்முல்ல சந்திக்கு அருகாமையில் வைத்து அவர்கள் மீது காவல்துறையினர் நீர்த் தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு காவல்துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.