கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் ஏற்பட்ட பதற்றம் - தற்போதைய நிலைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பிச் சென்ற 596 கைதிகள் தற்போது காவல்துறையின் காவலில் உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், தப்பியோடிய ஏனைய கைதிகளை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தற்போது முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி கைதி ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக அன்றைய தினம் இரவு முதல் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் பதற்றமான சூழல் நிலவியது. அதனைத் தொடர்ந்து, நேற்று காலை சுமார் 600 கைதிகள் புனர்வாழ்வு நிலையத்தின் இரண்டு பிரதான கதவுகளை உடைத்து தப்பிச் சென்றிருந்தனர்.

அவர்களில் ஒரு குழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தப்பியோடிய ஏனைய கைதிகளை தேடும் செயற்பாட்டில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.