நாட்டை விட்டுச் தப்பிச் செல்ல தென்னகோன் முஸ்தீபு : அரசாங்கத்துடனான டீலா என கேள்வி


பணியில்  இடைநிறுத்தம் செய்யப்பட்ட  பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோன் இலங்கையை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் விமான நிலையம் உட்பட அனைத்துத் தரப்பினரும் இதற்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடல் வழியாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

பொலிஸ் துறையின்உயர் பதவியை வகிக்கும் இந்த சக்திவாய்ந்த நபர், மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைவது அல்லது நாட்டை விட்டு வெளியேறுவது ஆகிய இரண்டு வழிகளில் ஒன்றை அவர் பரிசீலித்து வருவதாக சந்தேகம் இருப்பதாகக் கூறினார்.

ஊடகங்களும் அனைத்து குடிமக்களும், அதிகாரிகளும் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், நீதியைப் பெறுவதில் அரசாங்கத் தலைவர்களும் மக்களும் ஒரே பக்கம் இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

இதேவேளை,  முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதற்கு அவருடன் டீல் செய்யப்பட்டதா என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் இன்று ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

ஆதற்கு பதிலளித்த அவர்,

"தேசபந்து தென்னகோன் மட்டுமல்ல, இன்னும் சிலரும் இருக்கிறார்கள், அவர்களை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் எங்களிடம் சொல்லவில்லையே, பிரசன்ன ரணவீரவுடன் ஏதோ ஒரு டீல் இருக்கிறது என்று. நாங்கள் அவரையும் தேடுகிறோம். செவ்வந்தியையும் தேடுகிறோம். மேலும் உங்களுக்கு பெயர் தெரியாத சிலரையும் தேடுகிறோம். பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

--