தமிழ் தரப்பிடம் ஒற்றுமை வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்து

 | 


தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்க்கப்போவதாக அதிபர் கூறிவிட்டு, மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையையா தீர்வாக வழங்கப்போகிறார் என கேள்வி எழுப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இனப் பிரச்சினையை தீர்க்கும் விடயத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஒற்றுமை வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

பனை ஊடாகப் பெறக்கூடிய உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துவதில் எமக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒடியல், பனங்கற்கண்டு போன்ற பொருள்கள் வெளிநாட்டு, உள்நாட்டு மக்களால் விரும்பி வாங்கப்படுகின்றன. ஆனால் இப்பொருள்களை சந்தைப்படுத்துவதில் தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

பொருள்களின் விலைகள் குறையவில்லை

அரசாங்கம் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகளை விடுத்தாலும் பொருள்களின் விலைகள் குறையவில்லை. இந்த விலைக்குறைப்பு அப்பாவி மக்களை சென்றடைவதில்லை. அதிகளவான விலையில் பொருள்களை விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனங்களை அரசாங்கம் இழுத்து மூட வேண்டும். இது உண்மையில் ஒரு மாஃபியா. தாங்கள் நினைத்த விலைக்கு பொருள்களை இவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

கத்தரிக்காய் ஒரு கிலோ கிராம விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பெற்று அவற்றைப் பாரிய விலையில் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை அரசாங்கம் அறிவித்த விலையில் நெல்லை கொள்வனவு செய்வதில்லை. விவசாயிகளிடம் நெல் இருக்கிறபோதிலும் அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபையிடம் பணமில்லை எனவும் தெரிவித்தார்.

உழுந்து, கௌபி போன்ற பொருள்களை எங்களது பிரதேசத்தில் உற்பத்தி செய்து வருகிறார்கள். இவற்றை நல்ல விலைக்கு வாங்கக்கூடிய திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். கருவாடு ஏற்றுமதி செய்யப்படும் நிலை தற்போது இல்லை. இதனால், மீனை கருவாடாக உற்பத்தி செய்யும் கடற்றொழிலாளர்களும் பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

மலையக மக்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். இது தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நன்கு அறிவார். யுத்தத்துக்குப் பின்னர் தென்னையை பயிரிடாத பல பிரதேசங்கள் இருக்கின்றன. தென்னையை மீள பயிரிட முடியும் எனவும் தெரிவித்தார்.

மாவட்ட அபிவிருத்தி சபை முறை தொடர்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பேசியிருந்தார். உண்மையில் இம்முறை ஒரு தோல்வியடைந்த முறை. அதை நடைமுறைப்படுத்த வேண்டுமென சொல்கிறார். 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு மேலதிகமான அதிகாரங்களை வழங்குவதற்கு தயார் என நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். இவ்வாறான நிலையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு வருமென மக்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் என்றார்.

இவ்வாறான நிலையில் மாவட்ட அபிவிருத்தி சபை தொடர்பில் முன்னாள் அதிபர் ஏன் பேசுகிறார் என்பது புரியவில்லை. அதிகளவான இரத்தத்தை விலைகொடுத்து சமஷ்டி முறையிலான ஒருதீர்வை நாம் கேட்கிற நிலையிலேயே, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து இனங்களும் சுதந்திரமாக ஒற்றுமையாக வாழ வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளதாக அதிபர் கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில் மாவட்ட அபிவிருத்திசபை முறையா தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக வரப்போகிறது? என்கிற அதிர்ச்சி தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனப்பிரச்சினை விடயத்தில் ஒற்றுமை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாம் தீர்வை வழங்கத் தயார் ஆனால் உங்களில் ஒற்றுமை இல்லை எனக் கூறும் வாய்ப்பை தமிழ்த் தரப்பு உருவாக்கி விடக்கூடாது என்றார்.