புத்தாண்டில் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகள் - மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்


புத்தாண்டின் போது விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

சிலர்  இனிப்பு வகைகளை தரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்து வருவதாக சுகாதார அமைச்சின் சுற்றாடல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு சுகாதார பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

காலாவதி திகதி அல்லது உள்ளடக்கம் குறித்து உரிய முறையில் குறிப்பிடாமல் உணவு விற்பனை செய்வதால் நோய் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த பண்டிகைக் காலத்தில் தேவையற்ற இனிப்புகள் விற்பனை செய்யப்படுமாயின் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்க முடியும் என்றும்,

இல்லையெனில்  சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு 0112112718 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்

இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் அவசர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவில் இருந்து தேவையான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.