இடைநிறுத்தப்பட்ட ரஷ்ய விமானம்.. ரஷ்யாவின் அதிருப்திக்குள்ளாகியுள்ள இலங்கை

நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானத்தின் பயணிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் சகல பயணிகளும் இன்றும், நாளையும் அந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என இலங்கையில் உள்ள ‘எரோஃப்ளோட்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

குத்தகை நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மொஸ்கோவில் இருந்து வந்த குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் உத்தரவை இடைநிறுத்துமாறு ரஷ்ய விமான நிறுவனம் கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் குறித்த நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 8ஆம் திகதி விசாரிக்க கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதேவேளை ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே நேற்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டதாகவும், எரோஃப்ளோட் விமானம் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ரஷ்யாவின் அதிருப்தி குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.