இலங்கையில் எந்தவித நல்லிணக்கமும் ஏற்படாது என்பதை உலகறியச் செய்வோம் என்கிறார் சுமந்திரன்



இலங்கையில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வு இன்றி எந்தவித நல்லிணக்கமும் ஏற்படாது என்பதை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோமென பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று (07) உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் என்ன நடந்தது? யார் இதற்குப் பொறுப்பு? அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்ற விபரங்களை உறவினர்களுக்குத் தெளிவுபடுத்துவதும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதும் அரசின் பொறுப்பாகும்.

காணாமல் ஆக்கப்படுவது பலரால் செய்யப்பட்டிருக்கலாம் ஆனால் சாட்சியங்களின் அடிப்படையில் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவுக்கு முன்னால் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இறுதி இரண்டு நாட்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரச படையினரிடம் சரணடைந்தனர் என்று அரசு நியமித்த ஆணைக்குழுவினாலேயே சொல்லப்பட்டுள்ளது.

அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும் .

அத்துடன் ஒரு நிரந்தர அரசியல் தீர்வின்றி எந்தவித நல்லிணக்கமும் ஏற்படாது இதனை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.

கடந்த ஆட்சிக் காலத்தில் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி புதிய அரசமைப்பைச் செய்யும் பணியைச் செய்தோம் அதுவும் நிறைவேறாது அந்தரத்தில் விடப்பட்டது ஆகவே, உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், அது கண்துடைப்பற்றதாக இருக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.


இந்த அத்துமீறல்கள் தொடர்பில் நீதி செயற்படுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் நடப்பதற்கு உகந்த சூழ்நிலை இருக்க வேண்டும் ஆனால், உகந்த சூழ்நிலை இப்போது கிடையாது என அவர் தெரிவித்தார்.