சுமந்திரன் (M. A. Sumanthiran) போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என ஜனசெத முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான பத்தரமுல்லை சீலரத்ன தேரர் (Battaramulle Seelarathana Thero) தெரிவித்துள்ளார்.
இன்று (05) காலை மன்னார் (Mannar) பேருந்து நிலையத்தில், மக்கள் மத்தியில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போதே பத்தர முல்லை சீலரத்ன தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “தாய் நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்காக மக்கள் இன, மத பேதமின்றி ஒன்றிணைய வேண்டும்.
தமிழ் அரசியல் கட்சிகள் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) தங்கள் ஆதரவை வழங்கி ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர். இங்கு சஜித் பிரேமதாச மட்டுமல்ல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுமே கூட்டணிகள் உருவாகும் போது ஒப்பந்தங்களை தூக்கி எறிந்து விடுவார்கள்.
அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), திலித் ஜயவீர (Dilith Jayaweera) போன்றவர்களும் அவ்வாறானவர்களே. இவ்வாறான தலைவர்களை தேர்வு செய்தால் மேலும் பாதிப்படைவது வடக்கு, கிழக்கு மக்களே.
சுமந்திரன் போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சிறப்பான வாழ்க்கை வாழ்கின்றார்கள்.
வடமாகாணத்தில் வாழும் அப்பாவித் தமிழர்களுக்கு இதுவரை எந்த தீர்வும் எட்டவில்லை. அப்பாவிப் பொது மக்களை வைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள். எனவே தமிழ் மக்கள் சிந்தித்து உங்கள் வாக்குகளை டிரக்ரர் சின்னத்துக்கு அளிக்க வேண்டும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.