யாழில் இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு! தொங்க விடப்பட்ட பதாதைகள்

யாழ். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) தீடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியின் வசாவிளான் பகுதியில் போக்குவரத்து சபை பேருந்து மோதி சிறுவன் ஒருவன் படுகாயம் அடைந்திருந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் இடம்பெற்ற பதட்டமான சூழ்நிலையில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி மீது ஸ்கூட் டிரைவரால் வயிற்றில் மர்ம நபர் ஒருவர் குத்தியுள்ளார்.

இந்த நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது “எமக்கு பாதுகாப்பு வேண்டும்”, “நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம்”, “தனியார் பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தினை சூழ அவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தனர்.

அதேவேளை, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்த வெளிமாவட்ட பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு உள்நுழையாமல் காத்திருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.