பொகவந்தலாவை டியன்சின் தமிழ் மகா வித்தியாலய அதிபருக்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியை ஒருவரிடமும் மாணவிகளிடமும் தகாத வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேச பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் , கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் நேற்றும் இன்றும் கல்லூரி முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வலயக்கல்வி பணிப்பாளர் அவ்விடம் வந்தால் மாத்திரமே தாம் வகுப்பறைக்கு செல்வோம் எனக் கூறிய மாணவிகள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் இதில் இணைந்து கொண்டனர்.
பின்பு அவ்விடம் வந்த வலயக்கல்வி பணிப்பாளரிடம் மாணவிகளும் பெற்றோர்களும் குறித்த அதிபர் இதற்கு முன்பும் இவ்வாறு நடந்து கொண்ட சம்பவங்கள் இருப்பதால் அவரை இப்பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யும் படி எழுத்து மூலம் கடிதமொன்றை கையளித்திருந்தனர்.
அதற்கு வலயக்கல்வி பணிப்பாளர் தான் இவ்விடயத்தில் நியாயமானதொரு முடிவை எடுப்பதாக அங்கிருந்தவர்களிடம் உறுதியளித்தார்.
மேலும் மாணவர்களும் பெற்றோரும் இந்த பிரச்சினை முடியும் வரை குறித்த அதிபரை பாடசாலைக்கு வரக்கூடாது என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர்.