இலங்கையில் பகல் நேர உணவிற்காக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்த மாணவி

 

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பாக நாளாந்த கூலி வேலை செய்யும் பலரது குடும்பங்கள் ஒருவேளை உணவிற்கே அல்லல்படும் அவலநிலை உருவாகியுள்ளது.அரிசி மற்றும் மாவின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது.

ஆனால் அரசாங்கம் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாகவோ அல்லது மக்கள் மீது கரிசனை காட்டுவதாகவோ தெரியவில்லை.

இந்த நிலையில் உணவிற்கு பெரும் கஷ்டப்படும் குடும்பம் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தனது பகல் நேர உணவிற்காக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்த நெஞ்சை உருக வைக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில் தரம் 09 இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு தேங்காய் துண்டுகளை கொண்டு வந்துள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை நாளாந்த கூலி வேலை செய்தே தனது குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார். மாணவிக்கு மேலும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பாடசாலை இடைவேளையின்போது ஏனைய மாணவர்களுடன் பகலுணவை சாப்பிட சென்றபோதே இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவம், ஆசிரியர்களின் காதுகளுக்கு எட்டியதை அடுத்து ஆசிரியர்கள் உணவுப் பொதிகளை கொண்டுவந்து அந்த மாணவிக்கு கொடுத்துள்ளனர்.

இதேவேளை அதே பாடசாலையில் தரம் மூன்றில் கல்விபயிலும் மாணவர்கள் சிலரும் பகலுணவு இன்றி இருக்கின்றனர். அத்துடன், அந்த பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களில் பலர் முதல்நாள் இரவு உணவை உட்கொண்டிருக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.