எரிபொருள் பெற போலியான QR குறியீடுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!

எரிபொருள் பெறுவதற்காக போலியான QR குறியீடுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.போலியான QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருளை பெற சிலர் முயற்சித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்தகைய QR குறியீடுகளை அடையாளம் காண தகவல் தொழில்நுட்ப முகமையுடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் டொலர்கள் மூலம் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தினை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் நடைபெற்ற தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் குறித்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.அத்துடன், வாகனம் அல்லாத ஏனைய எரிபொருள் தேவைகளுக்கான QR குறியீடுகளை வாங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ளல், ஒரு தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வணிகப் பதிவு இலக்கத்தின் மூலம் பல வாகனங்களை பதிவு செய்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேவைக்கு ஏற்ப எரிபொருள் ஒதுக்கீடுகளை அதிகரிக்கும் வசதி மற்றும் QR குறியீடுகளை சட்டவிரோதமான முறையில் தயாரித்து பயன்படுத்தும் நபர்களை கையாள்வது குறித்தும் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.