ரணிலுக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்ற இராஜாங்க அமைச்சர் : தெற்கு அரசியல் அதிரடி மாற்றம்



எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்ற இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளார்.
 
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முன்னர் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையால் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்ததாக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார்.

இதேநேரம் அதிகளவிலான அரசியல் கட்சிகள் அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால் அடுத்த வாரம் மிகவும் முக்கியமானதாகவும், ஊடகங்களின் கவனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நோக்கித் திரும்பும் வாரமாக அமையும் என்றும் அவர் கூறினார்.

 இதற்கிடையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளளதாக ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு அவருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் சுமார் 20 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையவுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த நாட்டின் வரலாற்றில் மிகப்பெரும் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஐக்கிய மக்கள் கூட்டணி என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார  குறிப்பிட்டார்.

இதன்படி எதிர்காலத்தில் மேலும் பல கட்சிகளும் குழுக்களும் தமது கூட்டணியில் இணையவுள்ளதாக   ரஞ்சித் மத்தும பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை விரைவில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஜனநாயக போராளிகள் கட்சி என்பனவற்றின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தனர்.

இந்த சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன், சஜித் பிரேமதாசவை சந்தித்துப் பல விடயங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப் பணத்தை வைப்பிலிடும் நடவடிக்கை நாளை (14) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் முடிவடையவுள்ளது.

இதேநேரம் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான சர்வஜன சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீரவுக்கு இன்று  கட்டுப்பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரச அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழிநடத்தப்பட்ட ஆரம்பகட்ட அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாக அரச அச்சகர்  தெரிவித்துள்ளார்.