ஸ்தம்பிதமடைந்த வைத்திய சேவை : களமிறக்கப்படும் முப்படையினர்

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார துறையினர் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபாய் போக்குவரத்து கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டும் எனக் கோரி சுகாதார தொழிற்சங்கத்தினர் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த பணிபகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததை காணமுடிந்தது என எமது பிரதேச செய்தியாளர்கள் தெரிவித்தனர்..

குறிப்பாக மூதூர் தள வைத்தியசாலையில் வைத்தியர்கள் மாத்திரம் கடமை புரிந்த போதிலும் மருந்துகள் வழங்குவதற்கு எந்தவித ஊழியரும் இல்லாமையால் வெளிநோயாளர் பிரிவு, மருந்தக பிரிவு,  போன்றன இயக்கமின்றி காணப்பட்டது.

அத்தோடு அவசர பிரிவு வழமைபோன்று இயங்கியது.

தொலை தூரத்திலிருந்து பல அசௌகரியங்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைத்தியசாலைக்கு வருகை தந்த பல நோயாளர்கள் மருத்துவ சேவையை திரும்பிச் செல்லும் நிலைமை காணப்பட்டது.

இதேநேரம்  சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில், இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாடு முழுவதிலும் உள்ள 22 வைத்தியசாலைகளில், 600 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்தது.