தமிழர்களுடைய வாக்குகளுக்காக இராணுவத்தினரை காட்டிக் கொடுக்க முயலும் ரணில்! விமல் காட்டம்

தமிழர்களுடைய வாக்குகளை பெறுவதற்கு ரணில் விக்ரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் சட்டங்களை இயற்ற முயற்சிக்கிறார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு எதிரான கீழ்த்தரமான செயற்பாடுகளை ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோர் முன்னெடுத்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30 \1 தீர்மானத்துக்கு இணை அனுசரனை வழங்கினார்.

இந்த தீர்மானத்தை நாட்டு மக்களும், நாடாளுமன்றமும் அப்போது அறிந்திருக்கவில்லை. நாட்டுக்கு எதிராக ஒப்பந்தங்கள் மற்றும் தீர்மானங்களில் இருந்து விலகுவதாக 2019 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் காலத்தில் ராஜபக்ஸர்கள் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள்.

அந்த வாக்குறுதிகளுக்கு அமைய கோட்டபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் தோற்றுவித்தார்கள். இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30 \ 1 தீர்மானத்துக்கு இணையனுசரனை வழங்கும் இணக்கப்பாட்டில் இருந்து இலங்கை விலகியுள்ள நிலையில் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்களில் பல சட்ட வகிபாகத்துடன் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆகவே இராணுவத்தினருக்கு எதிராக எவர் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். பொய் சாட்சியம் வழங்கலாம். சரத் பொன்சேகாவை தவிர ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்படுகிறார்.

ஆச்சரியம் என்னவென்றால், யுத்த வெற்றியை பிரதான தேர்தல் பிரசாரமாக கொள்ளும் ராஜபக்ஸர்கள் இராணுவத்தினருக்கு எதிரான சட்டமூலங்களுக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள். ஆகவே இந்த சட்டமூலத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.