பந்துல குணவர்தனவிடம் சவால் விடுத்த சிறீதரன்

நெடுந்தீவில் இதுவரை அரச பேருந்தோ அல்லது தனியார் பேருந்தோ சேவையில் ஈடுபட முன்வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்சினைகள் குறித்த விவாதத்தின் போது, கேள்வியெழுப்பிய எஸ்.சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை நெடுந்தீவில் எந்த பேருந்தும் சேவையில் ஈடபடாத காரணத்தினால்14 கிலோமீற்றர் பயணத்தூரத்தை பொது மக்கள் தனியார் வாடகை வாகனங்களின் ஊடாகவே பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன அங்கு அரச பேருந்து ஒன்று சேவையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.

எனினும் அது 1950ஆம் ஆண்டு காலத்தில் அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட மிகப் பழைய பேருந்து என சிறிதரன் எடுத்துரைத்தார்.

இந்தநிலையில், அங்கு சீரமைக்கப்பட வேண்டிய 3 கிலோ மீற்றர் பாதை புனரமைப்பு பணிகளையும், பேருந்து சேவைகளையும் அடுத்த வருடத்திற்குள் பூர்த்தி செய்யவுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதன்போது, சிறிதரன் ”நெடுந்தீவுக்கு வந்து லாண்ட் மாஸ்டரில் பயணியுங்கள்” என அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் சவால் ஒன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.