இலங்கை தமிழர்களுக்கு மகளிர் உரிமை தொகை: தமிழக அரசின் முடிவு

தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

அதற்கமைய கடந்த வருடம் செப்டெம்பர் 15-ம் திகதிமுதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமைத் தொகை பெற்று வருகிறார்கள்.

இத்திட்டத்தில் பயன்பெற மேலும் பல லட்சம் பெண்கள் மேல்முறையீடு செய்து காத்திருக்கும் நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இத்திட்டத்தை மேலும் விரிவு படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, மேல்முறையீடு செய்துள்ளவர்களில் சில லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.

தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 19,487 இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அந்தக் குடும்பத்துப் பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் வகையில் அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

பெப்ரவரி மாதமே அவர்களுக்கான உரிமைத் தொகை வங்கியில் வரவு வைக்கப்படும் என்றும்  தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதம் ஏற்பட்டால் மார்ச் முதல், முகாம்களில் வசிக்கும் குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.