நடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் - வியட்நாமிலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு!


வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளவர்களை திருப்பி அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை வியட்நாமின் ஹனோயில் உள்ள இலங்கை தூதரகம், UNHCR மற்றும் IOM ஆகிய இரண்டு அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு தேவையான நிதி வசதிகளை அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு முன்னெடுத்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு திரும்பி வர இணக்கம் தெரிவிக்காத 130 பேரும் , அகதிகளுக்கான சர்வதேச அமைப்பினூடாக மூன்றாம் தரப்பு நாடுகளிடம் தீர்வை கோரியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக கடல் வழியாக பயணித்த போது, படகு பழுதடைந்ததில் நிர்க்கதியாகி ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு அப்பால் கடலில் 300 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள், ஜப்பானிய கடற்படையினரால் கண்டறியப்பட்டு, பின்னர், மீட்கப்பட்டனர்.

நவம்பர் 5 ஆம் திகதி, தெற்கு கடற்கரையில் வுங் டவுவிலிருந்து 258 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, ​​அதன் இயந்திர அறை கடலுக்குள் மூழ்கியது அப்போது கடல் சீற்றமாக இருந்தது.

அதனையடுத்து மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல், அருகிலுள்ள மற்ற கப்பல்களுக்கு அவசர சமிக்ஞைகளை ஒளிபரப்பியது. அதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற ஜப்பானிய கப்பல் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து அகதிகளை மீட்டுள்ளது.

அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் உள்ளடங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.