புலம்பெயர் இலங்கை தொழிலாளர் ஒருவர், தென்கொரியாவில் மோசமாக நடத்தப்பட்டமை தொடர்பில் அந்த நாட்டின் ஜனாதிபதி லீ ஜே-மியுங் எடுத்த உடன் நடவடிக்கையை பாராட்டியுள்ள இலங்கை அரசாங்கம், நன்றியையும் தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் ஃபோர்க்லிஃப்ட்டில் கட்டிவைக்கப்பட்டு தூக்கிச் செல்லப்படுவதை காட்டும் காணொளியொன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இது பரவலாக பொதுமக்களிடையே சீற்றத்தையும் கண்டனத்தையும் தூண்டியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, அந்நாட்டு ஜனாதிபதி லீ ஜே மியுங் இந்த சம்பவத்தை மனித உரிமை மீறல் என்று கண்டித்ததுடன், முழுமையான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், புலம்பெயர்ந்த பணியாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான தென் கொரியாவின் விரைவான நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பொதுமகனுக்கு நீதியை உறுதி செய்வதற்காக சியோலில் உள்ள இலங்கை தூதரகம் தென்கொரிய அதிகாரிகளுடன் தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.