சர்ச்சைக்குரிய பதிவுகளின் பின்னணியில் இலங்கை கிரிக்கெட் வீரர்களே உள்ளனர் : ஹசரங்க அதிரடி குற்றச்சாட்டு


இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விமர்சனங்களின் பின்னணியில், இலங்கையின் கிரிக்கெட் வீரர்கள் இருப்பதாக அணித் தலைவர் வனிந்து ஹசரங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றிலேயே இலங்கை அணி வெளியேறிய நிலையில், இலங்கை அணியினர் நேற்று (19) நாடு திரும்பினர்.
 
இந்த தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் திறன் வெளிப்பாடு மிக மோசமாக இருந்த நிலையில் அணியின் வீரர்கள் தொடர்பாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
 
ஏற்கனவே இது தொடர்பான கருத்துக்களை வெளியிட்டிருந்த வனிந்து ஹசரங்க, சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் ஊடாக அணியின் வீரர்களையும் இரசிகர்களையும் பிரிப்பதற்கு சூழ்ச்சி செய்யப்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.
 
 விமான நிலையத்தில் வைத்து இது தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,
இவ்வாறான பதிவுகளின் பின்னணியில் செயற்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் தொடர்பாக தாம் அறிந்து வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதேநேரம்  “இலங்கை அணி வீரர்கள் சரியாக விளையாடவில்லை. இதனால் போட்டிகளில் இருந்து விலக நேரிட்டது.
 
அணித்தலைவர் மற்றும் வீரர் என்ற ரீதியில் இதற்காக நான் வருந்துகிறேன். நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை,
 
துடுப்பாட்டம், களத்தடுப்பு மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாகச் செயற்படவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.