மீண்டும் அரங்கேறிய கம்பனிகாரர்களின் அட்டூழியம்: மனோ கணேசன் கண்டனம்


இலங்கையின் இரத்தினபுரி வெள்ளந்துர தோட்டத்திலுள்ள  குடியிருப்பு ஒன்று காடையாளர்களினால் தாக்கி சேதமாக்கப்பட்ட சம்பவம் ஒன்று  இன்று (10) பதிவாகியுள்ளது.

சம்பவத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வன்மையாக கண்டித்துள்ளதுடன் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.

இலங்கையின் மாத்தளை, ரத்வத்தை கீழ் பிரிவில் லயன் குடியிருப்பில் வாழும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை கடந்த மாதம் தோட்ட உதவி முகாமையாளர் அண்மையில் அடித்து சேதப்படுத்தியிருந்தார். 

இதற்கு எதிராக சிறிலங்கா எதிர்கட்சிகள் குரல் எழுப்பியிருந்த நிலையில் அவ்வாறான ஒரு சம்பவம் இரத்தினபுரியில் இன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் இரத்தினபுரி காவல் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றதுடன் சிறிலங்கா பெருந்தோட்ட துறை  அமைச்சர் ரமேஷ் பத்திரணவுடனும்  கலந்துரையாடியுள்ளார்.

தோட்ட காணியில் சட்ட விரோதமாக குடியிருப்பு அமைக்கப்பட்டால், அதனை சட்ட ரீதியாக கையாண்டு,  சட்ட ரீதியில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு, நீதிமன்றம் ஊடாகவே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மாறாக, தோட்ட நிர்வாகம் சட்டம், ஒழுங்கை கையில் எடுத்து செயற்பட முடியாது எனவும் நிர்வாகம் சட்ட ரீதியிலான அணுகுமுறையை கையாளவில்லை எனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். 

காவல்துறையினர் போன்று  அப்பாவிகளின் வீட்டை உடைக்கும் காடையர்கள் தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் கூறியதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

தோட்ட நிர்வாகத்திடமுள்ள காடையர்களை கட்டுக்குள் கொண்டு வருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.