ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் பேச்சாளர்களின் வரிசையில் இலங்கை பின்வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது.
செப்டம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர் மட்ட அமர்வில் 92 நாட்டுத் தலைவர்கள் மற்றும் 56 அரசாங்க தலைவர்கள் உரையாற்றவுள்ளனர். எனினும் இலங்கை அதில் உள்ளடங்கவில்லை.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட பேச்சாளர்களின் அசல் பட்டியலில், செப்டம்பர் 21 அன்று இலங்கைக்கு ஒரு முதன்மையான பேச்சுக்கான இடம் தரப்பட்டது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வு எச்எஸ் என்ற ஹெட் ஒப் ஸ்டேட் (அரச தலைவருக்கான) உரை அப்போது இலங்கைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட பேச்சாளர் பட்டியலின்படி இலங்கைக்கான உரை செப்டம்பர் 24ஆம் திகதியில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை பொதுச்சபை அமர்வில் இலங்கையின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியே கலந்துகொள்கிறார்.
எனவே எச்எஸ் (அரச தலைவர்), எச்ஜி (அரசாங்கத்தலைவர்) என்ற பகுதியில் இருந்து நீக்கப்பட்ட இலங்கை எம்( அமைச்சர்) என்ற பகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தடவை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், சீனாவின் அதிபர் ஜி.ஜின்பிங், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சிரிய அதிபர் பஷர் அல்-அசாத், சவூதியின் இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் மியன்மார் இராணுவ தலைமையாளர் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            