ரணில் விக்ரமசிங்க Ranil Wikramasinhe சிறிலங்கா அதிபர்


நாட்டில் ஏற்பட்டுள்ள கஷ்டத்தை போக்கியது தற்போது உள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள். எனவே எனது ஆதரவு ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கே என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை அவரின் செயற்பாட்டினால் தற்போது நாடு முன்னேறி வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிறுவன பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு நேற்று (27)  மன்னார் உப்பு உற்பத்தி நிலையத்தில் இடம் பெற்றிருக்கிறது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்  போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் 

'' தமிழர் ஒருவரை அதிபராக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அது முடியாத காரியம்.

தமிழர் ஒருவர் எவ்வாறு சிறிலங்கா அதிபராக வர முடியும்? அதிபராக  தெரிவு செய்ய எத்தனை வாக்குகள் தேவை? தமிழர்களின் வாக்குகள் எத்தனை உள்ளது.

நாட்டில் உள்ள அதிகமானவர்கள் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவையே மீண்டும் அதிபராக தெரிவு செய்வார்கள்.

கடந்த காலங்களில் மக்கள் எதிர் நோக்கிய பிரச்சனைகள் மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவார்கள்.''  என தெரிவித்தார்.  

இதேவேளை மன்னார் உப்பு உற்பத்தி நிலையத்தின் முகாமையாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் உப்பு உற்பத்தி நிறுவன அதிகாரிகள் பணிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த உப்பு உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிகின்ற பணியாளர்கள் தொழிலாளர்கள் என 150 பேருக்கு வருடாந்த ஊக்குவிப்புத் தொகை கொடுப்பனவுகள் காசோலைகளாக வழங்கி வைக்கப்பட்டு இருக்கின்றது.