அமெரிக்காவின் அதிரடி குற்றச்சாட்டை நிராகரித்தது இலங்கை



இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவ தளங்களை நிறுவ சீனா ஆய்வு செய்து வருவதாக அமெரிக்காவின் உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையை இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள ஜிபூட்டி மற்றும் கம்போடியாவில் உள்ள ரீம் கடற்படைத் தளத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளது.

அதேவேளை இலங்கை உட்பட மியான்மர், கியூபா, கினியா, பாகிஸ்தான் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளில் இராணுவ தளங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை சீனா ஆராய்ந்து வருகிறது.

 
தற்போதுள்ள சர்வதேச சட்ட முறைமைக்கு சவால் விடும் வகையில் சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தயாராகி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு பிரிவு வெளியிட்ட 2024 ஆண்டு அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கை தனது எல்லைக்குள் இராணுவ தளம் அமைப்பது தொடர்பில் சீனா உள்ளிட்ட வெளிநாட்டு அரசாங்கங்களுடன் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

 
மேலும், "இலங்கையில் சீன இராணுவத் தளம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அமெரிக்க புலனாய்வு அறிக்கை தவறானது. இந்த கூற்றுக்களை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது எல்லைக்குள் இராணுவ தளங்களை நிறுவுவதற்கு எந்தவொரு வெளிநாட்டையும் இலங்கை அனுமதிக்காது எனவும் இராஜாங்க அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

--