இருண்ட யுகத்துக்குள் இலங்கை..! வெளியாகியுள்ள எச்சரிக்கை

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினால் எதிர்காலத்தில் நாடு இருண்ட யுகத்துக்கு செல்லலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவால் கடுமையான மற்றும் பாதகமான விளைவுகளை குறைப்பதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆறு முன்மொழிவுகளை பரிந்துரை செய்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் பொது மக்களால் தாங்க முடியாததாக ஆகிவரும் பின்னணியில் குறைந்த வருமானம் பெறும் சமூகத்தின் தாக்கம் பாரிய அளவில் இருக்கிறது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் பெரும்பான்மையான மக்களால் பின்வரும் இரண்டு முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவை, உணவின் எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் உணவு உட்கொள்ளும் அளவை குறைத்தல் என்பனவாகும்.

உணவுக்கான செலவை குறைப்பது என்பது உணவின் தரத்தை குறைத்தல் என்பதாகும். மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கிய தாக்கம் குழந்தைகள் மீது இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அறிக்கைகளின்படி தெற்காசியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டின் அடிப்படையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளது.

இவ்வாறான சூழ்நிலைகள் காரணமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பின்வரும் வேலைத்திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

தரமான மற்றும் சத்தான உணவுகளை தேர்ந்தெடுப்பது குறித்து அடிப்படை அறிவை சமூகத்துக்கு வழங்குவதற்காக தேசிய வேலைத் திட்டத்தை சுகாதார அமைச்சு உடனடியாக கொண்டுவர வேண்டும்.

ஒப்பீட்டளவில் மலிவான மாற்று உணவுகள் மற்றும் தரமான புரத உணவுகள் ஆதாரங்கள் அறிமுகப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மாகாண மற்றும் மாவட்ட ரீதியாக சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இடர் குழுக்களை அடையாளம் காண முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அடையாளம் காணப்பட்ட இடர்கள் இலக்காகக் கொண்ட நடைமுறை வீடுகளுக்கான வேலைத்திட்டம் உடனடியாக அறிவிக்கப்படவேண்டும்.

பச்சிளம் குழந்தைகள் கர்ப்பிணி தாய்மார்கள் மத்தியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு தரமான புரத மூலத்துடன் கூடிய ஊட்டச்சத்துகள் அடங்கிய நிவாரணப் பணி உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நிவாரணம் வழங்கும் என்ற போர்வையில் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பற்ற உணவுகளை ஊக்கப்படுத்துவதுவதை மட்டுப்படுத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் நீரிழிவு உட்பட்ட தொற்றா நோய்களின் அபாயத்தை குறைக்கும் சரியான தொழில்நுட்ப தலையீடு செய்யப்பட வேண்டும்.

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட பாடசாலை மதிய உணவுத் திட்டம் மிகவும் வலுவான மற்றும் நடைமுறை திட்டமாக மாற்றப்பட வேண்டும். ஒட்டுமொத்த உணவு நெருக்கடியை நிர்வகிக்கும் அதேவேளை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டின் எதிர்கால தாக்கத்தை குறைக்க விசேட செயலணி உடனடியாக நிறுவப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது