ரணிலும் பொறுப்புக்கூற வேண்டும் : சரித ஹேரத் வலியுறுத்து


பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்சர்களை போல் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் பொறுப்புக்கூற வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர்,

2024 ஆம் ஆண்டு அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும்.

அதிபர் பொருளாதார பாதிப்புக்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்படுகிறார்.

பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷர்களை போல் அதிபர்  ரணில் விக்ரமசிங்கவும் பொறுப்புக் கூற வேண்டும்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் வரையறையற்ற வகையில் சர்வதேச பிணைமுறியங்களில் இருந்து பெற்றுக் கொண்ட கடன்களினால் இலங்கையில் அரசமுறை கடன்கள் நெருக்கடிக்குள்ளானது.

நல்லாட்சி அரசாங்கத்தில் நாடு வங்குரோத்து நிலையடைந்திருக்க வேண்டும்.வங்குரோத்து நிலையை ரணில் விக்ரமசிங்க பிற்போட்டார்.

முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சவின் ஆட்சியில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது

முறையான முகாமைத்துவமில்லாததால் வங்குரோத்து நிலைக்கு செல்ல நேரிட்டது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க தற்போதைய பொருளாதார பாதிப்பின் ஒரு பங்குதாரர்.

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு ஆதரவு வழங்குவதா ? அல்லது பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான திட்டங்களை முன்வைப்பவர்களுக்கு ஆதரவு வழங்குவதா ? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.” என்றார்.