இரு கிண்ணங்களை சுவீகரித்தது இலங்கை : வெற்றிக் களிப்பில் ரசிகர்கள்


இலங்கை கிரிக்கெட் மற்றும் வலைபந்தாட்ட அணிகள் தமது இறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்று சாம்பியன் கிண்ணங்களை கைப்பற்றியுள்ளன. இந்த வெற்றிகள் இலங்கை ரசிகர்களை பெரும் உற்றாசக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

15ஆவது ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் டுபாயில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதனையடுத்து, முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பானுக ராஜபக்ச 45 பந்துகளில் 71 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் இவர் பெற்ற 03ஆவது அரைச்சதம் இதுவாகும்.

ஹசரங்க டி சில்வா 36 ஓட்டங்களும், தனஞ்செய டி சில்வா 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் ஹரீஸ் ரவூப் 3 விக்கெட்டுகளையும், நசீம் ஷா, சதாப் கான், இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 171 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்கியது. இலங்கை அணியினரும் பந்து வீச்சில் மிரட்டினர். இதனால் பாகிஸ்தானின் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் போராடி அரை சதமடித்து 55 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இப்திகார் அகமது 32 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனால் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

அத்துடன் 6-வது முறையாக ஆசிய கிண்ணம் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டுகளையும் ஹசரங்க 3 விக்கெட்டுகளையும் அதிரடியாக வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக பானுக்க ராஜபக்ஷ தெரிவானார்.

அத்துடன், சிறந்த பிடியெடுப்புக்கான விருது அஷேன் பண்டாரவுக்கு வழங்கப்பட்டது.

மேலும், 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தொடர் ஆட்டநாயகனாக வனிந்து ஹசரங்க தெரிவானார்.


இதேவேளை சிங்கப்பூரில் நடைபெற்ற 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

இம்முறை போட்டிகளை ஏற்று நடத்திய சிங்கப்பூர் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 63 - 53 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை அணி 6 முறையாக சம்பியனாக மகுடம் சூடியது.

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் வரலாற்றில் 5 தடவைகள் சம்பயினான நடப்பு சம்பியன் இலங்கை, இம்முறை 1ஆ0வது தடவையாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பலம் வாய்ந்த அணிகளை எல்லாம் வீழ்த்தி கடும் போட்டிக்கு மத்தியில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகி வெற்றி பெற்றமை விசேட அம்சமாகும்.

இலங்கை அணிகளின் இந்த வெற்றியானது ரசிகர்களை பெரும் உற்சாக ஆழ்த்தியுள்ளது.

இந்த வெற்றிகளை இரசிகர்கள் பட்டாசு கொழுத்தி இவ்வாறு கொண்டாடினர்.

இதேபோன்று ஆப்கானிஸ்தானிலும் இலங்கைக்கு ஆதரவாக கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்ததோடு ஏனைய நாடுகளை ரசிகர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.