மூன்றாவது நடுவர் மீது இலங்கை முறைப்பாடு

பங்களாதேஷுக்கு எதிராக நேற்று முன்தினம் (06) நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் துடுப்பில் பந்து பட்டது தெளிவாக ஒளிப்பதிவில் தெரிந்தபோதும் மூன்றாவது நடுவர் ஆட்டமிழப்பு வழங்காதது தொடர்பில் போட்டி மத்தியஸ்தரிடம் முறையிடப்போவதாக இலங்கை அணி தெரிவித்துள்ளது.

பினுர பெர்னாண்டோ வீசிய நான்காவது ஓவரில் சௌம்யா சார்கர் துடுப்பில் பட்டாவாறு சென்ற பந்தை விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ் பிடியெடுத்தார். நடுவர் ஆட்டமிழப்பு வழங்கியபோதும் சௌம்யா மூன்றாவது நடுவரிடம் முறையிட்ட நிலையில் மூன்றாவது நடுவர் ஆட்டமிழப்பு இல்லை என்று அறிவித்தார்.

இந்நிலையில் போட்டி மத்தியஸ்தரிடம் எழுத்துமூல முறைப்பாட்டை செய்யப்போவதாக இலங்கை உதவி பயிற்சியாளர் நவீட் நவாஸ் போட்டிக்குப் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். ‘நாம் பார்த்ததை தவிர மூன்றாவது நடுவர் வேறு காட்சியை பார்த்தாரா என்பது எனக்குத் தெரியவில்லை.

நாம் பார்த்த காட்சியில் பந்து படுவது தெளிவாக தெரிகிறது. இதனை நாம் போட்டி மத்தியஸ்தருக்கு எடுத்துச் செல்வோம்’ என்று நவாஸ் தெரிவித்தார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்த நிலையில் தொடர் 1–1 என சமநிலை பெற்றுள்ளது.