சர்வதேச நாணயநிதியத்துடன் ஒப்பந்தம் : ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் (I.M.F.) ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் ஒன்றை நாளை வெள்ளிக்கிழமைக்குள் (நவம்பர் 23) இறுதி செய்ய முடியும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவித்துள்ளார்.

இன்று(21) ஆரம்பமான இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வழங்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஊழியர் மட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னோக்கிச் செல்வது ஒரு தீர்க்கமான நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.

இதன் மூலம் இந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் மூன்றாவது தவணை பற்றிய சாதகமான செய்திகளை  இலங்கை எதிர்பார்க்க முடியும் என்று ஜனாதிபதி கூறினார்.

கடன் மறுசீரமைப்புப் பேச்சுக்கள் இவ்வருடம் டிசெம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என நம்புவதாகவும் ஜனாதிபதி திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

இருதரப்பு கடன் வழங்குபவர்கள் மற்றும் சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடன் கடன் மறுசீரமைப்பு பற்றிய கலந்துரையாடல்கள் இறுதி கட்டத்தில் இருந்த நேரத்தில் தனது கட்சி ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“இப்போது நம் முன்னால் உள்ள உண்மை என்னவென்றால், இந்த ஒப்பந்தங்கள் நமக்கு நன்மை பயக்கிறதா அல்லது தீங்கு விளைவிக்கிறதா என்பதைச் சரிபார்க்க எங்களுக்கு நேரமில்லை, ஏனெனில் இவை கிட்டத்தட்ட 2 வருட கலந்துரையாடல்களின் முடிவுகள். முந்தைய ஒப்பந்தத்தை ஆய்வு செய்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ந்தால் நாங்கள் முன்னேற முடியாது, ”என்று அவர் கூறினார்.

இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஒவ்வொரு நாட்டுடனும் தனித்தனியான உடன்படிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி திஸாநாயக்க தெரிவித்தார்.

சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடன், ஆரம்ப ஒப்பந்தங்கள் தற்போது வரையப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் மாத இறுதிக்குள் மறுசீரமைப்பு பணிகளை முடிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறினார்.

பொருளாதாரத்தை வலுப்படுத்த பேச்சுவார்த்தை

இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணயநிதியத்துடன் ஒப்பந்தம் : ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு | Sri Lanka Agreement With Imf

 நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் சாத்தியமானதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக ஜனாதிபதி திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.