தமிழ்த் தரப்பை நிபந்தனையற்ற பேச்சுக்கு அழைத்த சிறிலங்கா - கடும்தொனியில் தமிழ்த் தலைமைகளுக்கு முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்!

சிறிலங்கா அரசுடன் மீண்டும் மீண்டும் தேன் நிலவுக்குச் சென்று வெறும் கையுடன் திரும்பி வந்து தம்மையும் ஏமாற்றி மக்களையும் அவமதிக்கும் செயல் தேவைதானா? என தமிழர் விடுதலைக் கூட்டணி கடும் தொனியில் கருத்து வெளியிட்டுள்ளது.

மீண்டும் ஒருமுறை தமிழ்க் கட்சிகள் சில, சிறிலங்கா அரசுடன் ஒரு நிபந்தனை அற்ற பேச்சுக்குத் தயாராகி வருகின்றன எனத் தெரிவித்து தமிழ்க் கட்சிகளின் தலைமைகள் தொடர்பில் இவ்வாறு கடுமையான கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்தக் கூட்டணியின் தலைவர் பரமசிவம் சிறீதரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தமிழர்களுடைய உரிமைகளுக்கான விடுதலைப் போராட்டத்தில் ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் இனத்தின் எதிர்காலத்துக்காகத் தமது உயிர்களை விதைத்திருக்கிறார்கள்.

அவர்களுடன் இருநூறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் தமது உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். பலகோடி பெறுமதியான சொத்துக்களையும் நாம் இழந்திருக்கிறோம்.

எமது உறவுகள் உலகம் முழுவதும் சிதறுண்டு போய் இருக்கிறார்கள். இப்படியான இழப்புக்களுடன் கூடிய ஒரு இனத்தின் சார்பில் இதனுடன் சம்பந்தமே இல்லாத ஒரு பிரிவினரும், இதன் வலிகளைப் புரிந்துகொள்ளாத ஒரு பிரிவினரும் வலி சுமந்த தமிழர்கள் சார்பில் முடிவுகளை எடுத்து அவர்கள் மேல் சுமத்தும் முயற்சிகளைத் தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கின்றது.

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி அதிகாரமுள்ள இணைப்பாட்சி அடிப்படையிலான அரசொன்று தமிழர்களின் மரபுவழித் தாயகத்தில் அமைப்பதற்கான ஒரு முதற்கட்ட இணக்கப்பாட்டை அரசு வெளிப்படுத்தாதவரை தமிழர் தரப்பு பேச்சுக்குச் செல்லக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.