மனித குலத்திற்கு எதிராக செயற்பட்ட சிறிலங்காவின் போர்க் குற்றவாளி ஐ.நாவில் - வெடித்தது சர்ச்சை!


இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் போர்க்குற்றம் புரிந்ததாக சிறிலங்கா அரசு மீதும் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் களமுனைகளில் செயற்பட்ட இராணுவத்தினர் மீதும் சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், போர்க்குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள சிறிலங்காவின் இராணுவ அதிகாரி ஒருவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் பங்குபற்றியுள்ளமை பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

மனித உரிமைகள் அமர்வில், இவரின் பங்கேற்பை கனேடிய சட்டத்தரணி ஒருவர் பகிரங்க கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில், சிறிலங்காவின் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் குலதுங்க பங்கேற்றமை தொடர்பில், கனேடிய சட்டத்தரணியும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் நிபுணத்துவ உறுப்பினருமான வி.ஜே.கிரான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகமும் இந்தக் குற்றச்சாட்டுகளை நம்பகமானதாகக் கண்டறிந்துள்ளது.

சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் மற்றும் போர்க்குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரி, மேஜர் ஜெனரல் குலதுங்க, வவுனியா ஜோசப் முகாமில், 2016-2017 வரை பணியாற்றியுள்ளார்.

இவர் மீது போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இவர் எவ்வாறு மனித உரிமைகள் தொடர்பான அமர்வில் பங்குபற்ற முடியும் எனவும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், அவர் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியுமா என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் நிபுணத்துவ உறுப்பினரான வி.ஜே.கிரான் வினவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.