நாட்டில் போதியளவு உர விநியோகத்தை உறுதிப்படுத்த 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க விவசாயத் துறை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வங்கிகள் டொலரை விடுவித்தால் உர நிறுவனங்களுக்கு தேவையான உர அளவுகளை வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயப் பொருட்களை தடையின்றி வழங்குவதையும் விநியோகிப்பதையும் உறுதிசெய்யும் புதிய சட்டமான அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாகவும் பிரதமர் விளக்கினார்.
உக்ரைன் யுத்தம் காரணமாக உலகம் கோதுமை மற்றும் உரத் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளதாக பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தட்டுப்பாடு அதிகரிக்கும் போது, உடனடியாக தீர்வு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இலங்கையின் உணவு விநியோகம் மோசமடையும் என்று அவர் விளக்கினார்.
நகர்ப்புறங்களில் பயன்பாட்டில் இல்லாத நிலங்களைக் கண்டறிந்து விவசாயம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அதைக் கடக்க வேண்டுமானால் ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிர்மல் சிறிபால டி சில்வா, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            