நாட்டில் போதைப்பொருள் பரவலைத் தடுப்பதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மற்றொரு கட்டம் நேற்று நடைபெற்றது.
அதன்படி, 6,141 பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கி நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையில் 23,231 நபர்கள், 9,459 வாகனங்கள் மற்றும் 7,019 மோட்டார் சைக்கிள்களும் சோதனை செய்யப்பட்டன.
சோதனைகளின் போது, போதைப்பொருள் தொடர்பாக 881 நபர்கள் கைது செய்யப்பட்ட அதே நேரத்தில் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 22 நபர்கள் மற்றும் 389 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த நடவடிக்கைகளின் போது, போக்குவரத்து குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளமைக்கு அமைய, மதுபானத்துடன் வாகனம் செலுத்திய 97 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 3,314 நபர்களுக்கு எதிராகவும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.