ஒரே இரவில் 1 வயது குறைந்த தென் கொரிய மக்கள்..என்ன நடந்தது தெரியுமா..!

பொதுவாக ஆண்டுகள் செல்ல செல்ல நமக்கு வயது ஏறி கொண்டே போகும். இது தான் உலக வழக்கம், ஆனால் தென் கொரியர்கள் ஒரே இரவில் 1 வயது குறைந்து விட்டனர்.

இந்த இளமை தென் கொரியர்களுக்கு உடல் ரீதியாக கிடைக்கவில்லை. மாறாக அந்நாட்டில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள ஒரு சட்டத்தின் மூலம் தென் கொரிய மக்கள் 1 வருடம் இளமையாகி விட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள தென் கொரிய சட்டமானது ஒரு தனிநபரின் வயது கணக்கிடும் பழைய முறையை நீக்கி இருக்கிறது. சர்வதேச வயது கணக்கிடும் முறையை பின்பற்ற கூறுகிறது.

அந்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வயதை கணக்கிடும் பழைய முறையானது ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் போதே துவங்குகிறது. அந்த குழந்தை பிறந்தவுடன் அதற்கு 1 வயது என்பதே அவர்களின் பழைய கணக்கீடு.

அதே போல இதுவரை, தென் கொரியர்கள் பிறக்கும் போது 1 வயதாகக் கருதப்பட்டு வந்ததோடு, அவர்களின் உண்மையான பிறந்தநாள் வரை காத்திருப்பதற்கு பதிலாக, ஜனவரி 1-ஆம் திகதி வந்தவுடன் தங்கள் வயதில் 1 வருடம் சேர்த்து கொள்ளும் பழக்கத்தையும் கடைபிடிக்கிறார்கள்.

இதுவே பழைய கொரியன் வயது கணக்கிடும் முறை ஆகும். இதை பற்றி இன்னும் புரியும்படி சொவதென்றால் அங்கு பிறக்கும் ஒரு குழந்தைக்கு பிறந்தவுடன் 1 வயது என கணக்கிடப்படுவதோடு, அதன் அடுத்த பிறந்த நாள் வருவதற்குள் புதிய ஆங்கில ஆண்டின் துவக்க மாதமான ஜனவரி 1 வந்தால் அந்த குழந்தையின் வயது 2 எனக் கணக்கிடப்படுகிறது.

அதாவது ஒரு ஆண்டின் டிசம்பர் 31-ஆம் திகதி ஒரு குழந்தை பிறந்தால் அன்று அந்த குழந்தைக்கு 1 வயது எனவும், அடுத்த நாளான ஜனவரி 1-ஆம் திகதிஅதே குழந்தைக்கு 2 வயதாகவும் இருக்கும்.

புதிய வயது கணக்கிடும் முறை அந்நாட்டில் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் சர்வதேச வயது கணக்கீட்டு முறையின்படி, ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் வயது உலக நாடுகளின் வழக்கப்படி பூஜ்ஜியமாகவே கணக்கிடப்படும்.

பிறந்தே பிறகே வயது கணக்கிடப்படும் என்ற இந்த புதிய நடைமுறையை சுமார் 70% தென்கொரிய மக்கள் வரவேற்றுள்ளனர். வயதைக் கணக்கிடும் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது