உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
தென்னாபிரிக்க அணியின் அபார பந்து வீச்சால் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் களமிறங்கிய அனைத்து வீரர்களும் 10 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் பெற்றுக் கொண்ட தனிநபர் ஓட்டங்களை விட 13 உதிரி ஓட்டங்களே அதிகமாகும்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் மார்கோ ஜென்சன் (Marco Jansen) மற்றும் தப்ரைஸ் ஷம்சி (Tabraiz Shamsi) தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
57 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு வெற்றியிலக்கை அடைந்தது.
தென்னாபிரிக்க அணி சார்பாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் (Reeza Hendricks) 29 ஓட்டங்களையும், ஐடன் மார்க்ரம் (Aiden Markram) 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்கா அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும் முதலாவது அணியாக தெரிவாகியுள்ளது