சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில சலுகைகள் : அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை (17) காலை 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படும்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதன்பின்னர்  25ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை மீதான விவாதம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் மாதம்  21 ஆம் திகதி வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

அதன் பின்னர், ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பை மார்ச் 2 1ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.,மேலும் நாளை முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து நாட்டின் நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் அவதானம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் தொழிற்சாலைகளுக்கான செலவுக் குறைப்பு முதன்மையாகக் குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்படும் தொகை 06 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
 
 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம்  அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகளையும், மேலும் அரச வேலைகளையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட அளவுக்குள் இவை இருக்கும் என்று நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தேவைகளுக்கு ஏற்ப  வரவு செலவுத் திட்டத்தின் விபரங்கள், சர்வதேச நாணய நிதியத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


அரசுத் துறையின் ஆட்சேர்ப்புகள் பாதீட்டுக்கு பின்னர் ஆரம்பிக்கும். ஆனால் அவை அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாடுகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.


வரவு செலவுத் திட்டத்தில்  புதிய வரிகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது என்றும் குறித்த அதிகாரி கூறியுள்ளார்.

பாதீட்டில் பாதுகாப்பு அமைச்சக ஒதுக்கீடுகள் 442 பில்லியன் ரூபாய்களாக உள்ளன, இதில் 382 பில்லியன் தொடர்ச்சியான செலவீனங்களுக்காகவும், 60 பில்லியன் ரூபாய்கள் மூலதனச் செலவீனங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.