SLFP முக்கிய கோப்புகளை காணவில்லை: கட்சி தலைமையகத்தில் நுழைய தற்காலிக தடை


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மருதானை பொலிஸாரிடம்  வினவியபோது, காணாமல் போன கோப்புகளில் கட்சியின் நிர்வாக விவகாரங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, பல கோப்புகள் உள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் நேற்று (05) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளுக்காக கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகள் முடியும் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசரக் கூட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, அவசர அரசியல் கூட்டத்தை நடத்துமாறு கோரி கட்சியின் பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. , தயாசிறி ஜயசேகர மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா, சான் விஜயலால் டி சில்வா தவிர்ந்த, சட்டரீதியாக அழைக்கப்படக்கூடிய அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.