சர்வதேச அரசியலில் பகடைக் காயாக மாறிய இலங்கை


இலங்கையினுடைய நீதித்துறை சார்ந்த விடயங்களில் சரிந்து போயிருக்கின்ற சம காலத்தில் சட்டமா அதிபர் அரசாங்கத்தினுடைய கூலியாக இருந்து  நீதிபதியின் பதவி விலகலுக்கு உச்சகாரணியாக மாறிப்போயுள்ளார் என கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு- குணரட்ணம் தெரிவித்தார்.

இலங்கையின் அரசியல் இப்போது சர்வதேச அரசியலினுடைய காய் நகர்த்தலின் மையப்புள்ளியாக மாறியிருக்கின்றது. இலங்கை அரசியலில் நீதித்துறை சார்ந்தும் பல்வேறுபட்ட சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. ஒரு நீதிபதி வெளியேறியிருக்கின்றார். சர்வதேச ரீதியான பார்வை எப்படி இருக்கின்றது.

இலங்கையினுடைய இந்தச் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்காலத்தில் இலங்கை சந்திக்க இருக்கின்ற எதிர்நிலையான நெருக்கடிகள் எப்படி இருக்க போகின்றது என்பது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

"இலங்கைத்தீவு கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார ரீதியாக சந்தித்த சவால் உலக ரீதியாக பேசுபொருளாக்கப்பட்ட விடயம் ஒரு நாடு எவ்வளவு தூரம் அதனுடைய தவறான அரசியல் முன்னெடுப்புக்களால் பொருளாதார கொள்கைகளால் பாரிய சிக்கலுக்குள் தள்ளப்பட முடியும் என்பதனுடைய ஒரு படிப்பினையாக இலங்கை மாறிப்போனது.

இவ்வாறிருந்த நாடு அதிலிருந்து மீண்டெழ முடியுமா, தன்னை தற்காத்துக் கொள்ள முடியுமா என்று பார்க்கும் போது ஒரு நாட்டினுடைய இயக்கம் மனித உடலின் இயக்கத்தைப் போன்றது.

ஒரு நாட்டினுடைய முதுகெலும்பே அதனுடைய நீதித்துறை ஆகும். எத்தனை துறைகள் இருந்தாலும் நீதித்துறை முதன்மையானது. நீதித்துறை தான் ஒரு நாட்டை முழுமையான இயக்கத்தில் கட்டிவைக்கக் கூடிய ஒரு சிறந்த நிர்வாக அலகு.

இந்த நிர்வாக அலகே சவாலுக்கு உள்ளாக்கப்பட்டால் அதுவே அந்த நாட்டின் நீண்டகால இருப்புக் குறித்த கேள்வியை இந்த உலகப்பரப்பில் எழுப்பும். அவ்வாறான ஒரு சவாலை நீதித்துறை சார்ந்து நீண்டகாலமாக இலங்கை சந்தித்து வந்திருக்கின்றது. இப்பொழுது அது பட்டவர்த்தனமாக உலகப்பரப்பில் மீண்டும் பேசுபொருளாக்கப்படுகின்றது.

ஒரு நீதிபதி வெளியேறுகின்ற அளவிற்கு தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என கூறி தமிழ் நீதிபதி சரவணராஜா வெளியேறிய விடயம் இலங்கையின் நீதித்துறை சாரந்து தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டினுடைய நீதித்துறை சுயாதீனமாக மக்களுடைய நலன் சார்ந்த செயற்பாட்டை வெளிப்படுத்துகின்ற போதுதான் ஒரு நாட்டினுடைய ஜனநாயகத்தினுடைய விழுமியம் உச்சமாகப் பேணப்படும்.

நீதித்துறையை தற்காத்து நிற்கும் சட்டமா அதிபர் என்பவர் அந்த நாட்டினுடைய நீதித்துறையின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதாக அரசியல் சார்பற்றவராக நீதிதேவதையாக செயற்பட வேண்டியவர்.

இதுமட்டுமன்றி கடந்த காலங்களில் இடம்பெற்ற பல விடயங்களில் உலக அரங்கினால் பார்க்கப்பட்டு வருகின்றது. கடற்படை தளபதி வசந்த கருணகொட 13 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் ஆதாரங்களுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகின்ற போதும் அவருடைய குற்றச்சாட்டுகள் சட்டமா அதிபரால் வாபஸ் பெறப்பட்டு அந்தக் குற்றச்சாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டமை அரசு எவ்வளவு தூரம் ஒரு சட்டமா அதிபரை கையத்தில் வைத்து விருப்புக்களை நிறைவேற்றுகின்றமை வெளிப்படையாகியுள்ளது.

சட்டமா அதிபர் தொடர்பில் பல தரப்புக்கள் எற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தமை தற்போது நீதிபதியின் பதவி விலகலிலிருந்து உறுதியாகியுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்காலத்தில் அதாவது நல்லிணக்கத்தையும் இலங்கைத் தீவில் அரசியல் தீர்வையும் முழுமையாக ஆதரித்து நிற்பதாக உலகப் பரப்பிற்கு காட்டி வருகின்றார்கள்.

நீதித்துறையே சரிந்து போயிருக்கின்ற நாட்டில் இரண்டு விடயங்களையும் முன்னிலைப்படுத்தி உரிய முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதில் முழுமையாக தோல்வி அடைந்திருப்பதை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகின்றது.'' எனத் தெரிவித்தார்.