வரலாறு காணாத சாதனை படைத்த இலங்கை சுங்கத் திணைக்களம்

இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாறு காணாத அளவுக்கு அதிக வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு (2023) இலங்கை சுங்கத் திணைக்களம் அதிகப்படியான வருமானமாக 900 பில்லியன் ரூபாயை கடந்து சாதனை படைத்துள்ளது. 

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

"கடந்த வருடம் திணைக்களத்தின் மொத்த வருமானமாக 970 பில்லியன் ரூபா (97,000 கோடி ரூபா) பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இது இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வரலாற்றில் பெறப்பட்ட அதிகூடிய வருமானமாகும்.

மேலும், இந்தத் தொகையானது, 2022ஆம் ஆண்டின் வருமானத்தை விட 138%ஆல் அதிகரித்துள்ளது.

கடந்த வருட (2023) தொடக்கத்தில், சுங்கத் திணைக்களத்தின் வருடாந்த வருமான இலக்காக 1,217 பில்லியன் ரூபாவை நிதி அமைச்சு தீர்மானித்திருந்தது.

இருப்பினும், கடந்த வருடம் நிலவி வந்த பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக இந்த தொகையானது 893 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், குறிக்கப்பட்ட இலக்கை இலங்கை சுங்கத் திணைக்களம் அடைந்தது மாத்திரமல்லாமல் அதனை ஒரு வரலாற்று அடைவாகவும் பதிவுசெய்துள்ளதாக" கூறியுள்ளது.

இந்நிலையில், இவ்வாறு குறிக்கப்பட்ட இலக்கை அடைந்த இலங்கை சுங்கத் திணைக்களத்தின் இதற்கு முந்தைய ஆகக்கூடிய வருமானமாக 2018ஆம் ஆண்டு பெறப்பட்ட 923 பில்லியன் ரூபா இருந்தமை குறிப்பிடத்தக்கது.