சரத் பொன்சேகா மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானித்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சரத்பொன்சேகா, கட்சியின் நலன்களுக்கு எதிராக செயற்படுவதாகவும், கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும் அவர்மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கட்சி உறுப்பினர்கள், பொன்சேகாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள போதும், அவர் யாருடைய பேச்சையும் கேட்டதாக தெரியவில்லை இதனால் இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க இருப்பதாக மத்தும பண்டார கூறினார்.

மேலும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தாக்கல் செய்த வேட்புமனுவை தான் ஆதரிக்க விரும்பவில்லை என அண்மையில் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் பொன்சேகா கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலளித்த பொன்சேகாவின் செயலாளர் ஜகத் குமார, ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க ஆர்வமுள்ள தரப்பினரால் இவ்வாறான கட்டுக்கதைகள் பரப்பப்படுகின்றன என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.