கொழும்பில் இந்திய பந்துவீச்சாளரின் நெகிழ்ச்சியான செயல்


ஆசிய கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை தனது பந்துவீச்சால் சிதறடித்த இந்திய பந்துவீச்சாளர் மொகமட் சிராஜ், தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருக்கான பணத்தை மைதான ஊழியர்களுக்கு கொடுத்துள்ளார்.  

நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்திய-இலங்கை அணிகள் மோதிய ஆசிய கிண்ண இறுதிப்போட்டி நடைபெற்றது.

எனினும் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் கடுமையான மழை பொழிந்ததன் காரணமாக, ஆட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் கூட எழுந்தது.

ஆனால் மைதான வீரர்களின் பொறுப்பான செயற்பாட்டால் மழை நீர் மைதானத்திற்குள் தேங்காதவாறு தடுக்கப்பட்டது.

மைதானத்தில் பொறுப்புடன் செயற்பட்ட ஊழியர்களுக்கு ஆசிய கிரிக்கெட் சபையும் விருது வழங்கி கௌரவித்தது.

இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய பந்து வீச்சாளர் மொகமட் சிராஜ், தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதுக்கான பணத்தை மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக தெரிவித்தார்.

அத்துடன் அவர்கள் இல்லையென்றால் இந்தப்போட்டி நடந்திருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற போட்டியே தனது சிறந்த பந்து வீச்சு எனவும் அவர் தெரிவித்தார். இந்தப்போட்டியில் சிராஜ் 21 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 06 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.