முல்லைத்தீவிற்கு அழைத்து வரப்பட்ட சிங்கள பெண்கள்! சிவில் உடையில் இராணுவம்

சிவில் உடை அணிந்திருந்த பெருமளவிலான இராணுவத்தினர் பௌத்த மதத்தினை தழுவும் பெருமளவிலான பெண்களை காரணமே தெரியாமல் முல்லைத்தீவிற்கு அழைத்து வந்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்கு பௌத்த தேரர்கள் முயற்சித்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளையும் மீறி, இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பில் 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்வதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமாக நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் குறித்த பகுதியில் ஒன்று திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.